ரஷ்ய அதிகாரிகளுக்கு காலக்கெடு விதித்துள்ள தெரசா மே : அமெரிக்கா ஆதரவு!!

550

ரஷ்ய அதிகாரிகள் ஒருவார காலத்திற்குள் பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் தெரசா மே கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் சாலிஸ்பரி நகரில் கடந்த 4ஆம் திகதி வணிக வளாகம் ஒன்றின் வெளியே முன்னாள் ரஷ்ய உளவாளி Sergei Skripal மற்றும் அவரது மகள் மீது நச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

அப்போது Skripal மற்றும் அவரது மகள் மீது நச்சு அமிலம் தாக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக நேரடியாக குற்றஞ்சாட்டினார்.

அதுமட்டுமின்றி இந்த விவகாரம் குறித்து ரஷ்யா 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தது.

ஆனால் இது குறித்து ரஷ்யா தற்போது வரை விளக்கம் அளிக்காத காரணத்தினால், பிரித்தானியாவில் பணியாற்றும் 23 ரஷ்ய அதிகாரிகள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றும் என்று தெரசா மே தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரிகள் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்படாத நிலையில், அவர்களுக்கு ஒரு வாரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அரசகுடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் எனவும் தெரசா மே தெரிவித்துள்ளார்.

வெளியுறவு துறை அதிகாரிகளை வெளியேற்றியதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய முன்னாள் உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தில் பிரித்தானியாவிற்கு, அமெரிக்கா தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.