தம்பதியரை செங்கல் சூளையில் போட்டு எரித்துக் கொன்ற வழக்கில் அதிரடி திருப்பம்!!

717

பாகிஸ்தானின் லாகூர் நகரில் கிறிஸ்தவ தம்பதியரை உயிரோடு எரித்துக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூர் அருகே அமைந்துள்ள சக் என்ற கிராமத்தில் செங்கல் சூளை ஒன்றில் சஹ்ஜாத் மசி(35) மற்றும் அவரது மனைவி ஷமா(31) ஆகியோர் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர்.

குறித்த சூளையின் அருகே இந்த தம்பதியர், தங்களது 4 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கூலி பாக்கியை கேட்டு அந்த சூளை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி கூலி பாக்கியை தராவிட்டால் வேலையை விட்டு வெளியேறி விடுவோம் என்றும் சஹ்ஜாத் மசி கூறியுள்ளார்.

ஆனால் வேலையை விட்டு வெளியே போக வேண்டும் என்றால் தமக்கு 5 லட்சம் ரூபாயை தந்து விட்டுதான் செல்ல முடியும் என்று சூளையின் உரிமையாளர் மிரட்டியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சஹ்ஜாத் மசி குரானை அவமதித்ததாக கூறி அப்பகுதியில் தகவல் பரவியது. இதைக் கேட்டு கொதித்தெழுந்த அப்பகுதி மக்கள் சஹ்ஜாத் மசியின் குடியிருப்புக்குள் புகுந்து அவரை தாக்கியுள்ளனர்.

மேலும் ஆத்திரம் அடங்காத அவர்கள் சஹ்ஜாத் மசி மற்றும் அவரது மனைவி ஷமாவை தூக்கி கொழுந்து விட்டு எரிந்த செங்கல் சூளை தீக்குள் வீசினர். இதில் அந்த தம்பதியர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சுமார் 50 பேரை கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் அவர்களில் 5 பேருக்கு கடந்த 2016-ம் ஆண்டில் மரண தண்டனையும், மேலும் 10 பேருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

எஞ்சியுள்ள 20 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து லாகூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.