சினிமாவை மிஞ்சும் வகையில் சிறுநீரக மாற்றம் : திக் திக் நிமிடங்கள்!!

294

தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம், அம்புலன்ஸ் மூலமாக விரைவாக கொண்டு செல்லப்பட்டு பெண்ணொருவருக்கு பொருத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செந்தில்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர்.

இதற்கிடையே, அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு சிறுநீரகம் தேவை என்ற தகவல் தெரிய வந்தது.

அதன் பின்னர், அப்பெண்ணின் குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, அரியானூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குறித்த பெண் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, உறுப்பு தானத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. செந்தில்குமார் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கும், சிறுநீரகம் தேவைப்படும் பெண் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கும் இடையே, சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு இருந்தது.

ஆனால், 15 நிமிடங்களில் சிறுநீரகத்தை கொண்டு வர வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், முக்கிய சாலைகளில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு நிறுத்தப்பட்டு, இரண்டு அம்புலன்ஸ் வாகனங்களில் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது.

அம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவர்கள், தாதிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் விரைந்து செயல்பட்டதால், 9 நிமிடங்களிலேயே அம்புலன்ஸ் வாகனம் மருத்துவமனையை அடைந்து குறித்த பெண்ணுக்கு சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.