தலை இல்லாமல் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல் : உண்மைக் கதை!!

347

அமெரிக்காவில் சேவல் ஒன்று தலைவெட்டப்பட்ட பின்னரும் 18 மாதங்கள் உயிர்வாழ்ந்துள்ளது கேட்பதற்கு அதிசயமாக இருந்தாலும், இது உண்மையாக நடந்த சம்பவம் தான்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் திகதி ப்ரூட்டாவில் உள்ள தங்களது பண்ணையில், லாய்ட் ஓல்செனும் அவரது மனைவி கிளாராவும் இறைச்சிக்காக கோழிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

சுமார் 40 – 50 கோழிகளை வெட்டி சுத்தம் செய்திகொண்டிருந்தபோது, இவர்கள் வெட்டியபோது ஒரு சேவலின் தலையும் வெட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த சேவல் மட்டும் இறக்கவில்லை, தலை இல்லாமல் முண்டத்துடன் அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருந்தது.

இதனைப்பார்த்த தம்பதியினர், தலை இல்லாமல் ஏன் இந்த சேவல் அங்கும் இங்கும் அலைய வேண்டும், பெட்டிக்குள் வைத்தால் சிறிது நேரத்தில் இறந்துவிடும் என அடைத்துவைத்து காலையில் பார்த்துள்ளார்கள். ஆனால் சேவல் இறந்துபோகவில்லை.

இதனால் அந்த சேவலை அப்படியே வளர்க்க ஆரம்பித்தார்கள், அதன் பெயர் மைக். இறைச்சி விற்கும் சந்தைக்கு செல்லும்போது அந்த தலையில்லா சேவலையும் லாய்ட் ஓல்சென் அழைத்து செல்வார். இதனால் இந்த சேவல் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது.

70 ஆண்டுகளுக்கு முன்னர் உண்மையில் நடைபெற்ற சம்பவம் ‘மிராக்கிள் மைக்’ என்ற பெயரில் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.

மைக் தலைவெட்டப்பட்டும் உயிர்வாழ்வதை ஆராய்ச்சியாளர் உறுதி செய்தபிறகு மைக் கண்காட்சிகளிலும், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், சேவலில் தலையை வெட்டும்போது அதன் கண்கள், அலகு போன்ற பகுதிகள் மட்டும் வெட்டப்பட்டது. சேவலின் முழுத்தலையானது அதன் கண்களுக்கு பின்னால் இருக்கும் எலும்பு போன்ற அமைப்பில் தான் உள்ளது.

முகத்தை மட்டும் வெட்டியதால் சேவலின் கழுத்து நரம்புகளும், மூளையின் 80 சதவீத பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் இதயத்துடிப்பு, சுவாசம், பசி, செரிமானப்பாதை அனைத்தும் இயல்பாகவே இருந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

மைக்குக்கு தினமும் திரவ வடிவிலான உணவுகள் சொட்டு மருத்து கொடுப்பதுபோல் நேரடியாக உணவுக் குழாய்க்குள் செலுத்தப்பட்டது.

தொண்டையில் அடைப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க, ஊசி செலுத்தும் சிரிஞ்ச் மூலமாக மைக்கின் உணவுக் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டது.

ஆனால் ஒரு நாள் சிரிஞ்ச் கொண்டு செல்ல மறந்துவிட்ட நிலையில், மாற்று ஏற்பாடு செய்வதற்குள் தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு மைக் இறந்துவிட்டது.