இங்கிலாந்திலும் பிரபலமடைந்து வரும் காளி பூஜை!!

612

kali1960களில் இங்கிலாந்தில் குடியேறிய பெங்காலி மக்களால் அங்கு துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டன.

அவை நாளடைவில் ஐரோப்பா, அமெரிக்கா மட்டுமின்றி மற்ற கண்டங்களிலும் பிரபலமடையத் தொடங்கின. தற்போது மேற்கு வங்கத்தில் நடைபெறும் காளி பூஜை நிகழ்ச்சிகள் இங்கிலாந்தில் நடைபெற ஆரம்பித்துள்ளன.

இத்தகைய நிகழ்ச்சிகளில் அங்குள்ள பிற இனத்தவரும் பங்குகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

மத்திய லண்டனிலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள ரீடிங் பகுதியில் வசித்துவரும் பெங்காலிகள் இதுபோன்ற கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக சன்ஸ்கிருதி என்ற இலாப நோக்கில்லாத அமைப்பு ஒன்றை நிறுவியுள்ளனர்.

சென்ற வருடம் இந்த அமைப்பின் மூலம் அவர்கள் இங்கிலாந்தில் காளி பூஜையைத் தொடங்கினர். அங்குள்ள டிரன்க்வெல் மேன்ஷன் ஹவுஸ் இந்த பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தது.

குமர்துலியில் இருந்து புரோத்யுத் பால் மூலம் வடிவமைக்கப்பட்ட காளி சிலையை நிறுவி அங்கிருந்தோர் வழிபட்டனர். சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இந்தப் பூஜையின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இந்த வருடம் ஷின்பீல்ட் கிராஞ் பகுதியில் காளி பூஜை நடைபெற உள்ளது. குமர்துலியில் இருந்து கோரா சந்த் பால் மூலம் இதற்கான சிலை வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

600க்கும் மேற்பட்டோர் இந்தப் பூஜையில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பாரம்பரியமான ஒரு பெங்காலிய விழாவாக வானவேடிக்கைகளுடன் இந்தப் பூஜையைக் கொண்டாட சன்ஸ்கிருதி அமைப்பினர் ஏற்பாடு செய்துவருகின்றனர்.

துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை போன்றவை இந்தப் பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. எனவே காளி பூஜையையும் இங்கு கொண்டாட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவரான அனுராதா பிஸ்வாஸ் தெரிவிக்கின்றார்.