மே மாதம் தொடக்கம் முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் கட்டாயம்!!

604

மே மாதம் தொடக்கம் முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்மாதம் 30ம் திகதிக்குள் வாடகை முச்சக்கர வண்டிகள் அனைத்தும் அதற்கான மீட்டர்களை பொருத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாடகை வண்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அவர்களின் பயண தூரம், அதற்கான கட்டணம், முச்சக்கர வண்டியின் விபரம் போன்றவை உள்ளடங்கிய பற்றுச்சீட்டு மே மாதம் தொடக்கம் வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான மீட்டரைப் பொருத்திக் கொள்வதற்காக ஆறுமாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 01ம் திகதியுடன் குறித்த சலுகைக் காலம் நிறைவுற்ற நிலையில் இம்மாதம் 30ம் திகதி வரை அச்சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும் மே மாதம் தொடக்கம் மீட்டர் மற்றும் கட்டண பற்றுச் சீட்டு வழங்கும் நடைமுறை கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என்றும் அதனை கடைப்பிடிக்காத முச்சக்கர வண்டிகள் பயணிகளுக்கான வாடகை சேவையில் ஈடுபட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதைக்கு 11 லட்சத்தி ஐம்பதினாயிரம் முச்சக்கர வண்டிகள் காணப்படும் அதே வேளை அவற்றில் 7 லட்சத்தி ஐம்பதினாயிரம் முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பயணிகளுக்கான வாடகைப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது