மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த்..!!

419

விருதகிருக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமலிருந்த விஜயகாந்த், மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார்.ஆனால் இந்த முறை ஹீரோவாக அல்ல. மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

அரசியலில் மிக்த தீவிரமாக இறங்கி, எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆன பிறகு, சினிமாவைத் தவிர்த்து வருகிறார் விஜயகாந்த். கடைசியாக 2010-ம் ஆண்டு விருதகிரி என்ற படத்தை நடித்து இயக்கினார். அந்தப் படம் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதற்கு அடுத்த ஆண்டு நடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சி அதிமுக கூட்டணி துணையுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிவிட்டார்.

இதனால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனாலும் தன் மகன் சண்முகப் பாண்டியனை ஹீரோவாக்கும் முயற்சியில் தீவிரமானார். இதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். இப்போது ஒரு கதையை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தில் விஜயகாந்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் இப்போது முன்னிலையில் இருக்கும் விஜய், சூர்யா போன்றவர்கள் திரையுலகில் ஒரு இடம் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது, தன் படங்களில் அவர்களை இடம்பெற வைத்து பிரபலமாக்கி, முன்னுக்கு வர உதவியவர் விஜயகாந்த்.

விஜய்க்கு ஒரு செந்தூரபாண்டியும், சூர்யாவுக்கு ஒரு பெரியண்ணாவும் அமைந்ததுபோல, தன் மகனுக்கும் இந்த புதிய படம் அமைய வேண்டும் என்பது விஜயகாந்த் ஆசை. கூடவே, அதிமுகவில் தன் கட்சி கரைந்து கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் திரைப்பிரவேசம் செய்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு உதவியாக இருக்கும் என்றும் கருதுகிறாராம்.