வெளிநாட்டில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் கைது : அரசுக்கு அவசர அறிவிப்பு!!

258

 

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சென்ற 131 இலங்கையர்கள் மலேசியா பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு, மலேசிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவேளை, மலேசிய தெற்கு கடல் பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் 7 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

குறித்த இலங்கையர்களை அழைத்துச் சென்ற இந்தோனேஷிய நாட்டவர்கள் 3 பேர் மற்றும் மலேசிய நாட்டவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு விதிமுறைகளை மீறியமை, மனித கடத்தல், பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் யொகோ பாரு எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அகதி முகாமைத்துவ முகவர் நிலையத்தினால் 43 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருந்தமையும், ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சுமார் ஒரு வருடங்களின் பின்னர் வெளிநாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற பெருந்தொகையினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.