தற்காலதில் இலங்கையில் சினிமாதுறை பல்வேறு வகையில் முட்டிமோதி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. அதற்கான அடித்தளமாக தரமான குறும்படங்கள் உள்ளன என்பது நிதர்சனமான உண்மை. அதற்கு வவுனியா மண்ணிலிருந்து வெளிவந்த “மேட்டுக்குடியின் கூப்பாடு” குறும்படம் ஒரு சான்று.
ரிஷாந் மற்றும் ரஞ்சித் இன் கன்னிப் படைப்பாக இருப்பினும் அவர்களின் முற்சியாலும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பினாலும் நேர்த்தியான முறையில் படம் வெளிவந்துள்ளது.
உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்படும் ஒரு படத்தின் அடிப்படையே அதன் நம்பகத்தன்மை தான். அந்த வகையில் வவுனியாவிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கதைக்கருவாக கொண்டு எடுக்கபட்ட “மேட்டுக்குடியின் கூப்பாடு” படத்தின் நம்பகத்தன்மையை விமர்சனத்திற்குட்படுத்த முடியாதுள்ளது.
படைப்பாளிகள் சமூகத்தால் ஆற்றப்படும் எதிர்வினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில் படைப்பாளிகளின் சமூகப் பிரச்சனையும் அவர்களின் திறனும் தங்கியுள்ளது. படம் வெளியான நாளிலிருந்து இளைஞர்களான ரிஷாந், ரஞ்சித் இருவரும் அவற்றை நேர்மையாக கையாண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.
படத்தின் தரம் மற்றும் இருவரின் பொறுப்புணர்ச்சியினதும் விளைவாக மேட்டுகுடியின் கூப்பாடு குறும்படத்தை பற்றிய நேர்காணலுக்கு இலங்கையின் முதன்மையான தமிழ் தொலைக்காட்சியான நேத்ராவினால் படத்தின் இயக்குனர் ரிஷாந்தும் நடிகர் ரஞ்சித்தும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந் நிகழ்ச்சி நேரடியாக மே 2ம் திகதி ஒளிபரப்பப்பட்டிருந்தது. இதன்போது “மேட்டுக்குடியின் கூப்பாடு” பற்றி கலந்துரையாடியதோடு படத்தின் கருவான மாவட்டளவில் நடைபெறும் பகிடிவதை (District ragging) பற்றியும் இருவரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
தரமான குறும்படத்தை உருவாக்கியதன் மூலம் வவுனியா மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்கள் நேத்ராவின் நேர்காணலில் பங்குகொண்டதன் மூலம் மேலும் வவுனியாவிற்கு ஒரு வைரத்தை சூட்டியுள்ளனர்.