டுபாய்க்கு பணிக்கு சென்று கொடுமையை அனுபவித்த தமிழர்கள் : இறுதியில் நடந்தது என்ன?

285

டுபாயில் தவித்த புதுக்கோட்டை இளைஞர்கள் ஈமான் அமைப்பின் முயற்சியால் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

டுபாயில் உள்ள ரோஷினி எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்துக்கு புதுக்கோட்டையை சேர்ந்த ராஜாக்கண்ணு மற்றும் சிவக்குமார் என்ற இரு இளைஞர்கள் கடந்தாண்டு மார்ச் மாதம் கொத்தனார் வேலைக்கு வந்தனர்.

இந்நிறுவனத்தை மேலூரை சேர்ந்த சேவுகன் என்பவர் நடத்தி வருகிறார். அங்கு இருவருக்கும் கம்பி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளும் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களால் செய்யமுடியவில்லை.

இதையடுத்து சொந்த ஊருக்கே செல்வதாக சேவுகனிடம் ராஜக்கண்ணுவும், சிவக்குமாரும் கூறிய நிலையில் அதனை அனுமதிக்காத அவர் இருவரையும் அடித்து உதைத்து வேலை வாங்கியுள்ளார்.

இந்த தகவலை இருவரும் ஊரில் உள்ள பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ரோஷினி நிர்வாகத்திடம் துபாய் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர்.

ஆனால் இரண்டு பேரும் தங்கள் நிறுவனத்திடமிருந்து ஓடிவிட்டதாக நிர்வாகம் கூறியுள்ளது. இதன் காரணமாக இரண்டு பேரும் கடந்த மூன்று மாதங்களாக தங்க இடமில்லாமல் தவித்ததுடன் உணவுக்கும் சிரமப்பட்டுள்ளனர்.

மேலும், பொலிஸ், தொழிலாளர் நலத்துறை, இந்திய துணைத் தூதரகத்தில் தங்களை தமிழ்நாட்டுக்கு திரும்ப அனுப்ப கோரியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த முயற்சிகளுக்கு பலன் கிடைகாத நிலையில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளை உதவி செய்யுமாறு ராஜாக்கண்ணு மற்றும் சிவக்குமார் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து துபாயில் உள்ள அல் வஹா நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் நிறுவன உரிமையாளர் சேவுகனிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்களது விசா ரத்து செய்யப்பட்டது.

பின்னர் இருவரும் நேற்று மாலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.