நூறு பாம்புகள் கடித்தாலும் விஷம் ஏறாது : அதிசய மனிதர்!!

734

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், பாம்புகளை சர்வ சாதாரணமாக கையாள்வதால் ‘விஷ மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர் ஜோய் குய்லிலன்(31). இவர், பாம்புகளைப் பிடிப்பதிலும், அவற்றை முறையாக கையாள்வதில் வல்லவராக திகழ்கிறார்.

தனது 14வது வயதிலிருந்து நாகப் பாம்புகளுடன் ஜோய் பழக ஆரம்பித்தார். அப்போது ஒருநாள் பாம்பு அவரை தீண்டியது. ஆனால் மருத்துவமனைக்கு செல்லாத ஜோய், கடிபட்ட இடத்திலிருந்து ரத்தத்தை வெளியேற்றிவிட்டு ஓய்வெடுத்தார்.

அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அவர், தூங்கிவிட்டு இயல்பாக எழுந்தார். தனக்கு விஷத்தை தாங்கிக்கொள்ளக் கூடிய சக்தி இருப்பதாக அப்போது நினைத்தார் ஜோய்.

அதன் பிறகு, பாம்புகளைப் பற்றி தெரிந்து கொண்ட ஜோய், அதன் விஷக் கடிகளில் இருந்து தப்பிக்க 3 வாரங்களுக்கு ஒருமுறை சிறிது விஷத்தை உடலுக்குள் செலுத்திக் கொள்கிறார். இதன் மூலம், தன்னுடைய உடலை பாம்புக் கடியை எதிர்கொள்ளும் அளவுக்கு தயார் செய்து வைத்துள்ளார்.

இதுவரை நூற்றுக்கணக்கான பாம்புக்கடிகளை இவரது உடல் சந்தித்திருக்கிறது. எனினும், அவற்றில் 5 முறை மட்டுமே மிக மோசமான நிலைக்குச் சென்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியிருக்கிறார் ஜோய்.

செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் இடத்தில் முதலில் வேலை செய்துவந்த ஜோய், பிறகு பிலிப்பைன்ஸ் சுற்றுச்சூழல் துறையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கும் பாம்புகளைப் பாதுகாக்கும் பணியை செய்து வருகிறார்.

இது தொடர்பாக ஜோய் குய்லிலன் கூறுகையில், ‘மரணத்துடன் விளையாடுகிறேன் என்று எனக்கு தெரிகிறது. ஆனாலும் பாம்புகளை விட்டு விலக நான் நினைத்ததே இல்லை. நூற்றுக்கணக்கான விஷப் பாம்புகள் என்னைக் கடித்திருக்கின்றன.

அதிக விஷம் கொண்ட பாம்புகளின் கடிக்குதான் என் உடல் ஒத்துழைக்கவில்லை. அதனால் மருத்துவமனை சென்று, சிகிச்சைப் பெற்றுத் திரும்பினேன். மருத்துவர்களே என்னைக் கொண்டு ஆச்சரியமடைந்தனர்.

சாதாரண மனிதர்கள் இந்தப் பாம்புக்கடிகளுக்கு உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றார்கள். அதனால்தான் என்னை எல்லோரும் ‘விஷ மனிதன்’ என்று அழைக்கிறார்கள். விஷத்தைச் செலுத்திக்கொள்வதால் பாம்புக் கடியிலிருந்து தப்பிப்பதோடு, என் உடல் உறுதியடையவும் செய்கிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் என்னைப் பரிசோதித்தனர். அதில் சக்தி வாய்ந்த இரண்டு பாம்புகள் என்னைக் கடித்தன. மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, நான் இயல்பாக இருப்பதாக கூறினார்கள். அதற்கு பிறகே நம்பாதவர்கள் கூட நம்ப ஆரம்பித்தனர்.

என்னுடைய ரத்தத்தை எடுத்துப் பரிசோதித்த மருத்துவர்கள், நாகப் பாம்பின் விஷத்தை எதிர்கொள்ளக்கூடிய எதிர்ப்புப் பொருள் இவருக்கு இருக்கிறது என்று சான்றளித்திருக்கிறார்கள். இயற்கையைப் பேணுவதில் பாம்புகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

பாம்புகளை நேசிக்கிறேன். பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குக் கொடுத்து வருவதை என் கடமையாக நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.