யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழாவில் அப்பகுதி மக்களுக்கு சாதியின் பெயரால் இழைக்கப்பட்ட அநீதியை தாங்க முடியாமல் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். வரணியை பிறப்பிடமாக கொண்ட 80 வயதுடைய மூதாட்டிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலயத்தின் தீவிர பக்தையான குறித்த மூதாட்டி, இவருடைய உறவினர்களால் பரம்பரை பரம்பரையாக மேற்கொண்டு வரும் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது ஆலயத்தின் தேர் JCB இயந்திரம் மூலம் இழுக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இதனால் குறித்த மூதாட்டி கடந்த மூன்று தினங்களாக மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் காணப்பட்ட நிலையில், உறவினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.
மூதாட்டியை வரணி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவத்தின் போது முதலாவது சமூக வர்க்கத்தினர் என தம்மை தாமே அடையாளப்படுத்திய சிலர் குறித்த தேரின் வடத்தை பிடித்து இழுக்கும் உரிமை ஏனைய பக்தர்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த தேரை இழுக்கும் சக்தி அந்த நபர்களிடம் காணப்படவில்லை. இதனால் அவர்கள் jcb இயந்திரம் மூலம் தேர்வடம் பிடித்து இழுத்திருந்தமை உலக வாழ் மக்கள் அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.





