வவுனியா புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பொங்கல் பெருவிழா!(படங்கள்,வீடியோ)

1168


வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெருவிழா நேற்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றுள்ளது.



 

வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் பகுதியில் உள்ள புதூர் எனும் காடும் காடு சார்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆலயமே புதூர் நாகதம்பிரான் ஆலயம். ஏறத்தாள நானூறு ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்று நீட்சி கொண்டதாக காணப்படும் இந்த ஆலயம் குறித்து பல்வேறு புதுமைகள் நிறைந்த செவிவழிக் கதைகள் நிலவுகின்றன.



குறிப்பாக ஈழத் தமிழரின் அதிக் குடிகளான நாகர்களின் மரபுவழி வழிபாட்டு முறைகளுள் ஒன்றான நாக வழிபாடு தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டுவந்ததன் ஓர் அங்கமாகவே இந்த ஆலயமும் வடகிழக்கின் ஏனைய நாக ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.




ஈழத் தமிழரின் நாக வழிபாடுகளில் மிக முந்திய தலமாகவும், கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்து நாகதீவு அல்லது மணிபல்லவத்தீவு என்ற நாமத்துடன் விளங்கிவரும் ஆலயமாகவும் யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. அதன்வழியே ஈழத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு நாக ஸ்தலங்கள் காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணையில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்திற்கும் வவுனியா மாவட்டம் புளியங்குளம் புதூரில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்திற்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.


நாகாகர்களின் நாக வழிபாட்டு முறையிலே ஆண் தெய்வமாக நாகத்தால் பூஜிக்கப்பட்ட தம்பிரானும் பெண் தெய்வமாக நாகத்தால் பூஜிக்கப்பட்ட பூஷணியும் விளங்குகின்றனர். தம்பிரான் என்பது சிவபெருமானின் மறுபெயராகும். அதேபோல் பூஷணி என்பது உமை அம்மையின் மறுபெயராகும்.

நேர்த்திகளை நிறைவேற்றிவைக்கும் நாயகனாக விளங்கும் புதூர் நாக தம்பிரான் ஆலயத்தின் நேற்றைய பொங்கல் விழாவின்போது பல்லாயிரக்கணக்கான அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களைப் பூர்த்திசெய்துள்ளனர்

அதன்படி, காவடியாட்டம், பாற்செம்பு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் என்பன அடியார்களின் நேர்த்திக்கடன்களாக நிறைவேற்றப்பட்டன.

வட தமிழீழத்தில் உள்ள பழமைவாய்ந்த ஆலயங்களில், மிகப்பெரிய மக்கள் கூட்டம் இராப்பொழுதில் அலைமோதும் திருத்தலங்களில் யாழ்ப்பாணம்-நயினாதீவு நாகபூஷணி அம்மன் (சப்பை இரதத் திருவிழா), முல்லைத்தீவு-வற்றாப்பளை கண்ணகி அம்மன் (வருடாந்த பொங்கல்), கிளிநொச்சி-புளியம்பொக்கணை நாகதம்பிரான்(வருடாந்த பொங்கல்), வவுனியா-புதூர் நாகதம்பிரான் (வருடாந்த பொங்கல்), மன்னார்-திருக்கேதீச்சரம் (சிவராத்திரி) என்பன சிறப்புற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.