சைக்கிளை திருடுவதற்காக மரத்தை வெட்டிய திருடன்!!

367

ஜேர்மன் நகரமாகிய Kasselஇல் சைக்கிள் ஒன்றைத் திருடுவதற்காக பல ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரத்தையே திருடன் ஒருவன் வெட்டிய சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது சைக்கிளை ஒரு மரத்துடன் சேர்த்து பூட்டி வைத்து விட்டு சென்ற ஒரு நபர், பின்னர் மீண்டும் அதை எடுத்துச் செல்வதற்காக வந்தபோது சைக்கிள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவருடைய அதிர்ச்சிக்கு காரணம் சைக்கிள் காணாமல் போனது மட்டுமல்ல அந்த சைக்கிளை எந்த மரத்தோடு சேர்த்து வைத்து பூட்டியிருந்தாரோ, அந்த மரமே காணாமல் போனதுதான். 13 வயதான அந்த மரம், 50 சென்றிமீற்றர்கள் சுற்றளவு கொண்ட மரம் என பொலிசார் தெரிவித்தனர்.

அந்த மரத்தை வெட்டியிருந்த விதத்தைப் பார்க்கும்போது, அதை வெட்டிய நபர் தொழில் ரீதியாக மரம் வெட்டும் ஒரு நபராக இருக்க வேண்டும் என்பது நன்கு தெரிகிறது, ஏனென்றால் அந்த மரத்தை எப்படி வெட்டினால் அது சைக்கிளை பாதிக்காத வகையில் விழும் என்பது வரை சரியாக கணித்து அந்த மரம் வெட்டப்பட்டிருந்தது.

சுற்றுச்சூழல் நிர்வாக அலுவலகத்தின் கணிப்புப்படி அந்த மரத்தை வெட்டியதால் ஏற்பட்டுள்ள இழப்பு 5,000 யூரோக்கள் ஆகும்.

அதே நேரத்தில் அந்த நபர் திருடிய சைக்கிளின் விலை 2,200 யூரோக்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.