இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு..!

525

courtஇந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவர் மீது வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி சதாசிவம் இன்று அறிவித்துள்ளார்.

இளம் பெண் வழக்கறிஞர் ஒருவரே முன்னாள் நீதிபதி மீதான இந்தப் புகாரை தமது வலைப்பதிவில் பதிவு செய்துள்ளார்.

தனது சட்டப்படிப்பின் இறுதியாண்டின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அந்தப் பெண்மணி கூறியுள்ளார்.



இச்சம்பவம் இடம்பெற்ற2012 ஆம் ஆண்டு தான் அந்த நீதிபதியிடம் வேலை பார்த்ததாகவும் அந்தப் பெண் வழக்கறிஞர் தனது வலைதளத்தில் எழுதியுள்ளார்.

அந்த சமயத்தில் ஒரு விடுதியில் தான் தங்கியிருந்தபோது, அந்த நீதிபதி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல பல பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டதாகவும், உயர்பதவியில் இருந்த அவரை தங்களால் எதிர்க்க முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது தாத்தா வயதையுடைய ஒருவரால் ஏற்பட்ட இந்த பாதிப்பில் இருந்து தன்னால் மீள முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டு கால சட்டப்படிப்பில் அனைத்து பிரச்சனைகளுக்கும் சட்டத்தில் தீர்வுள்ளது எனப் படித்து தெரிந்துகொண்டிருந்தாலும் , தேவையான பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை உணர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை அரசின் தலைமை வழக்கறிஞர் வஹான்வதி இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்த போது, விசாரணைக்காக மூவர் அடங்கிய குழுவை அமைப்பது எனும் முடிவு தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, எச்.எல்.தாத்து மற்றும் ரஞ்சனா பி தேசாய் ஆகியோர் இந்த விசாரணையை நடத்துவார்கள் என தலைமை நீதிபதி சதாசிவம் அறிவித்துள்ளார்.

காலத்தாமதம் இல்லாமல் உடனடியாக விசாரணையை துவக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.