கொமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த கனேடியப் பிரதிநிதி தீபக் ஒபராய், ஆனையிறவில் விடுதலைப் புலிகளுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதாக இலங்கை அரசாங்கம் கூறிய குற்றச்சாட்டை கனடா நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக, கொழும்பிலுள்ள கனேடியத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர் வன்முறைகளில் பாதிக்கப்பட்ட அனைத்து அப்பாவி மக்களையும் நினைவுகூரும் வகையிலேயே தீபக் ஒபராய் ஆனையிறவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதாக கனேடியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கனேடிய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை 2006ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தடை செய்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கனடாவின் பிரதமர் புறக்கணித்துள்ள நிலையில் கனடாவின் மீது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அரசாங்கத்தின் ஆதரவு செய்திதாள் ஒன்று பொதுநலவாய நாடுகளின் அமர்வுக்காக கனடாவின் சார்பில் வந்துள்ள வெளியுறவுத்துறையின் நாடாளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய், ஆனையிறவில் இறந்த விடுதலைப் புலிகளுக்காக மலரஞ்சலி செலுத்தினார் என்று குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் போரில் இறந்துப்போன பொதுமக்களுக்காகவே தாம் மலரஞ்சலி செலுத்தியதாக தீபக் ஒயராய் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்தபோதும் அவர் போரில் பலியான விடுதலைப் புலிகளுக்கு அவர் மலரஞ்சலி செலுத்த முற்பட்டார் என்று அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.