பிரித்தானிய பிரதமருக்கு இலங்கை கண்டனம்..!

467

lankaஇலங்கை ஜனாதிபதி இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்று கூறுவதற்காக, காமன்வெல்த் உச்சிமாநாட்டுக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அழைக்கப்படவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.

கேமரன் பிரிட்டனில் வாழும் தமிழ்ச் சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே விடுதலைப்புலிகளுடன் நடந்த போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறார் என்றும் இலங்கை செய்தித் தொடர்பு அமைச்சர் கெஹெலிய ரம்புக்கவல்ல குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே இந்த மாநாட்டுக்காக இலங்கை வந்திருக்கும் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக், இலங்கைக்கு வந்து கேட்கவேண்டிய முக்கியமான கேள்விகளைக் கேட்பது சரியானது என்றும் அதை கேமரன் செய்வார் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே, கலம் மெக்ரே உள்ளிட்ட ​செனல் 4 செய்தியாளர்களை, அவர்களின் பாதுகாப்பு கருதியே, தொடர்ந்தும் வடக்கு நோக்கி பயணிக்கவிடாமல் கொழும்புக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுத்ததாக அரசாங்கம் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.



அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

´அவர் (கலம் மெக்ரே) இலங்கைக்கு வரும்போது இங்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பும் என்றுதான் நான் எதிர்பார்த்தேன்´ என்றார் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல.

அனுராதபுரத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் அரசு உரிய நடவடிக்கை எடுத்தபடியாலேயே கலம் மெக்ரே குழுவினர் மீண்டும் கொழும்புக்கு அழைக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

´ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயிலை மறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அந்த இடத்தில் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமானால், அவர்களை கலைத்துவிட்டு அவரை (கலம் மெக்ரேவை) பாதுகாப்புக்காக மீண்டும் கொழும்புக்கு அழைத்துவருவதுதான் செய்ய வேண்டியது என்று நான் கருதுகின்றேன்.

அந்தக் குழுவினர் இடைநடுவில் டிக்கெட் வாங்கிக்கொண்டு அதே ரயிலில் ஏறிக்கொண்டால் பெரும் பிரச்சனை ஏற்படலாம்´ என்றார் கெஹெலிய ரம்புக்வெல்ல.

இதனிடையே, காணாமல்போனவர்கள் மற்றும் இறுதிக்கட்டப் போரில் படையினரிடம் சரணடைந்தபின்னர் இதுவரை தகவல்கள் தெரியாதுள்ளவர்களின் உறவினர்கள் கொழும்பு செல்லும் வழியில் மதவாச்சிப் பகுதியிலும் மன்னாரிலும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பியனுப்பபட்டுள்ளார்கள்.

அதுபற்றியும் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

´தற்போதுள்ள சூழ்நிலையில், இந்த மூன்று, நான்கு நாட்களுக்குள் நாட்டின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை இருந்தால் அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரச பாதுகாப்புத் துறைக்கு இருக்கிறது´ என்ற கெஹெலிய ரம்புக்வெல்ல, நாட்டின் புலனாய்வுத் துறையினர் வழங்கும் முன்னெச்சரிக்கைகளை தம்மால் தட்டிக்கழிக்க முடியாது என்றும் கூறினார்.