மனித உரிமை மீறல் குறித்து நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் – ஜனாதிபதி..!

427

mahindaமனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் எதனையும் தான் மறைக்க விரும்புவதில்லை எனவும் வெளிப்படையாக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இன்று (14) கருத்து வெளியிட்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையை பிரித்து தனிநாடு அமைப்பது என்பதை அனுமதிக்கவே முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



புலிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் இலங்கைக்கு நேரில் வந்து நிலைமையை பார்வையிடலாம் எனவும் இந்தியா சார்பில் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பங்குபற்றியுள்ளமை திருப்தி அளிப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தனக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழர்களின் உணர்வு குறித்து எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதத்தை அழிப்பது தனது நோக்கம் எனவும் புலம்பெயர் தமிழர்களுக்கு செவிசாய்க்கத் தயார் எனவும் ஆனால் அவர்களுக்கு தாம் கூறுவதையும் சற்று கேட்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமரை சந்திக்க தான் தயார் எனவும் அவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளதெனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

30 வருட யுத்தத்தில் பல மக்கள் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவை அனைத்தும் 2009ம் ஆண்டின் பின் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.