கிழக்கு ஹங்கேரியில் வாழ்ந்து வந்த 31 வயதான கர்ப்பிணிப்பெண் ஒருவர் தனது 15ஆவது வார கர்ப்பகாலத்தில் மூளையில் ஏற்பட்ட ரத்தப்பெருக்கால் மூளைச்சாவு நிலையை அடைந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார்.
ஆனால் அவரது வயிற்றில் இருந்த கருவானது ஆரோக்கியமாக இருந்தது. அந்தக் குழந்தை நலமுடன் பிறக்க அது இன்னும் மூன்று மாதங்கள் தாயின் கர்ப்பப்பையில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கணித்தனர். இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அந்தத் தாயை மருத்துவர்கள் மிகுந்த கவனமுடன் காப்பாற்றி வந்தனர்.
வயிற்றிலிருந்த சிசுவிற்கு 27 வாரங்கள் ஆனதும் அந்தக் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். சென்ற கோடைக்காலத்தில் பிறந்த அந்த ஆண்குழந்தை 1.42 கிலோகிராம் எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தது என்றும் தற்போது தனது குடும்பத்தினரிடம் அந்தக் குழந்தை வளர்ந்து வருவதாகவும் தெரிகின்றது.
இந்தத் தகவல்களை டெப்ரீசன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் மையத்தின் தலைவரான பெலா புரேடி சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 92 நாட்கள் உயிருடன் காப்பாற்றப்பட்ட அந்தப் பெண்ணின் இதயம், கணையம், கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் ஆகியவை நான்கு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். உறுப்பு நன்கொடை குறித்த விஷயங்கள் ஹங்கேரி சட்டத்தின்படி பாதுகாப்பாக வைக்கப்படும் என்பதால் அந்தக் குடும்பத்தினர் பற்றிய விபரங்களை புரேடி வெளியிடவில்லை.