இந்திய கிரிக்கெட் ஒப்பந்தத்தில் முக்கிய மூன்று வீரர்கள் நீக்கம்..!

240

bajjiஇந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து ஷேவாக், ஜாகீர்கான், ஹர்பஜன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் இந்திய அணிக்கான வீரர்களை தரம் வாரியாக ஒப்பந்தம் செய்து வருகிறது.

இதில் ‘ஏ’ தரத்தில் இடம்பிடிப்பவருக்கு ரூ.1 கோடியும் (இந்திய ரூபாய்), ‘பி’ தரத்தில் இடம்பெறுபவருக்கு ரூ.50 இலட்சமும், ‘சி’ தரத்தில் இடம் பெறுபவருக்கு ரூ.25 இலட்சமும் சம்பளமாக வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான (2013 அக்டோபர் 01 – 2014 செப்டம்பர் 30 வரை) இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்களை, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன், செயலாளர் சஞ்சய் பட்டேல், தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் ஆகியோர் அடங்கிய 3 பேர் கமிட்டி தேர்வு செய்து நேற்று அறிவித்தது.

கடந்த ஆண்டு ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் ‘ஏ’ தரத்தில் இடம்பெற்று இருந்த அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், ‘பி’ தரத்தில் இடம் பிடித்திருந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் ஆகியோர் இந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மூவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பின்னர் ஜாகீர்கான் உடற்தகுதி காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. கடந்த மார்ச் மாதம் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு பின்னர் ஷேவாக் அணியில் இடம்பிடிக்கவில்லை. ஹர்பஜன்சிங் கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கடைசியாக விளையாடினார்.

‘ஏ’ தரத்தில் ஒப்பந்தத்தில் தலைவர் டோனி, கிரிக்கெட்டில் இருந்து வருகிற 18-ந் தேதியுடன் ஓய்வு பெறும் டெண்டுல்கர், விராட்கோலி, அஸ்வின் ஆகியோருடன் ஆச்சரியம் அளிக்கும் வகையில் சுரேஷ்ரெய்னாவும் இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ‘ஏ’ தரத்தில் இடம் பெற்று இருந்த கௌதம் கம்பீர், யுவராஜ்சிங் ஆகியோர் ‘பி’ தரத்துக்கு இறக்கப்பட்டுள்ளனர். ‘பி’ தரத்தில் பிரக்யான் ஓஜா, இஷாந்த் ஷர்மா, உமேஷ்யாதவ், புஜாரா, ரோகித் ஷர்மா ஆகியோருடன் புதிதாக புவனேஷ்வர்குமார் இணைந்துள்ளார்.

எம்.விஜய், ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ‘சி’ தரத்தில் இருந்து ‘பி’ தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

‘சி’ தரத்தில் தினேஷ்கார்த்திக், அமித் மிஸ்ரா, விரித்திமான் சஹா, ரஹானே, வினய்குமார் ஆகியோருடன் புதிதாக அம்பத்தி ராயுடு, முகமது ஷமி, உனட்கட், மொகித் ஷர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு இந்திய அணிக்கு 37 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அது இந்த ஆண்டு 25 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.