அனுராதபுரத்தில் இருந்து அனுப்பி வைத்தவர்களே வாகன சாரதிக்கு பணத்தை வழங்க வேண்டும் – சனல் 4 ஊடக குழுவினர்..!

428

channel4அனுராதபுரத்தில் இருந்து தம்மை கொழும்புக்கு அனுப்பி வைத்தவர்களே தம்மை ஏற்றி வந்த வான் சாரதிக்கு பணத்தை வழங்க வேண்டும் என சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

தமது விருப்பத்திற்கு எதிராக அவர்கள் சொந்த செலவில் தம்மை அங்கிருந்து பலவந்தமாக அனுப்பி வைத்ததாகவும், பொலிஸார் தம்மை பலவந்தமாக வாகனத்தில் தள்ளியதாகவும் சனல் 4 தொலைக்காட்சியின் குழுவினர் குற்றம் சுமத்தினர்.

அனுராதபுரத்தில் தாம் தங்கியிருந்த போது நடந்தது என்ன என்பதை கண்காணித்து பணம் கொடுக்க வேண்டியதாக இருந்தால் பணத்தை கொடுக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை கொழும்பில் இன்று காலை மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுடன் இரண்டு அதிவேக தொடரணிகள் தம்மை பின் தொடர்ந்ததாக சனல் 4 ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.



மக்ரே மற்றும் அவரது குழுவினரின் இந்த குற்றச்சாட்டை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மறுத்துள்ளார்.

அவர்களை பின்தொடர வேண்டியதற்கான எந்த காரணங்களும் இல்லை. அவர்கள் இலங்கையில் இருப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைவதுடன் முதலில் அவர்கள் நாட்டில் உள்ள தற்போதைய சூழ்நிலைகள் பற்றி அனுபவங்களை பெறவேண்டும்.

அவர்களின் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றோம். முட்டாள்தனமானது. காரணம் அவர்களின் இந்த குற்றச்சாட்டு கவனத்தை திசைத் திருப்ப மேற்கொள்ளப்படும் தந்திரமாக இருக்கலாம் என்றார்.

முன்னதாக அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு அழைத்து வந்தமைக்கான வாகன வாடகை வழங்கப்படவில்லை எனக் கூறி செய்யப்பட்டிருந்த முறைப்பாடு குறித்து பொலிஸார் சனல் 4 குழுவினரிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.

கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டடிருந்த இந்த முறைப்பாடு தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே உட்பட குழுவினரை பொலிஸார் அழைத்து விசாரணை நடத்தியிருந்தனர். எனினும் தம்மால் பணத்தை செலுத்த முடியாது என சனல் 4 குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.