அசத்தலான வெற்றியுடன் விடைபெறும் சச்சின்..!

283

sachineமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியீட்டியுள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பமான இந்தப் போட்டி, இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் இறுதி மற்றும் 200வது டெஸ்ட் போட்டி என்பதால் இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

சச்சினின் சொந்த ஊரான மும்பையில் இடம்பெறும் இந்தப் போட்டியைக்காண, வங்கடே மைதானத்தில் இரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் சச்சினின் 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை எந்தவொரு போட்டியையும் நேரடியாக மைதானத்திற்கு வந்து பார்த்திராத அவரது தாயாரும் இந்தப் போட்டியைக் காண வந்திருந்தமை விஷேட அம்சமாகும்.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள், இந்திய பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு முகம்கொடுக்க முடியாது, எவரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் ஆட்டமிழந்து வௌியேறினர்.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் பாவெல் அதிக பட்சமாக 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இறுதியாக சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த மேற்கிந்திய தீவுகள் 182 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஓஜா 5 விக்கெட்டுக்களையும், அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

அடுத்ததாக தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பில் புஜாரா 113 ஓட்டங்களையும், சர்மா ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களையும் விலாசினர்.

குறிப்பாக இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் அதிரடியாக ஆடி, 12 பவுண்டரிகள் அடங்கலான 74 ஓட்டங்களைக் குவித்தார்.

முடிவில் இந்திய அணி 495 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஷில்லிந்க்பொர்ட் (Shillingford) ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை கைப்பற்றியதும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

313 ஓட்டங்களால் இந்தியா முன்னிலையில் இருக்க அடுத்ததாக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள், மூன்றாம் நாளான இன்று 187 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 126 ஒட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.

இதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய 2-0 என கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஓஜா 5 விக்கெட்டுக்களையும் அஸ்வின் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

மொத்தமாக இந்தப் போட்டியில் ஓஜா 10 விக்கெட்டுக்களையும் அஸ்வின் 7 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறு இருப்பினும் இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடுவதை பார்க்கவந்த அவரது இரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.