வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானம்!!

972

வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறைகளை வழங்கி சகல வர்த்தகர்களும் தமது ஊழியர்களும் தத்தமது குடும்பத்தினருடன் விடுமுறையைக்கழிக்குமாறு இன்று இடம்பெற்ற வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாக சபைக்கூட்டத்தில் அனைத்து வர்த்தகர்களின் ஒத்துழைப்புடன் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் பொதுக்கூட்டம் இம்மாதம் முதலாம் திகதி இடம்பெற்றது. இதன்போது தலைவராக எஸ்.சுஜன், செயலாளராக அ.அம்பிகைபாகன், பொருளாலாளராக ந.சுந்தரதாசன் உப தலைவராக எம்.கே.எம்.பாகீம், உப செயலாளராக எம்.எச்.எம்.அஸ்கர், நீண்டநாள் வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் பி.எஸ்.அப்துல்லாவின் மகன் பி.எஸ்.ஏ.பசீர் நிர்வாக சபையினரால் கௌரவ உப தலைவராக தெரிவு செய்யப்பட்டனர்.

வர்த்தகர் சங்கமானது வர்த்தகர்களின் நலனிலேயே அக்கறையுடனும் முழு அர்ப்பணிப்புடனும் செயற்படுத்தவதற்கு உறுதி பூண்டுள்ளது. வர்த்தகர் சங்கமானது தமது முதல் நடவடிக்கையாக சகல வர்த்தக நிலைய உரிமையாளர்களையும் ஒன்றிணைத்து நடாத்துவதன் மூலம் வர்த்தகர்களுக்கிடையேயான ஒற்றுமையினை மேம்படுத்துவதற்கான வழிவகைகளைமேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும்,

தங்களால் ஒரு மாதகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த வர்த்தகர்களின் ஆய்வறிக்கையின் மூலம் தற்போது வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வர்த்தகர் சங்கத்திடமிருந்து எவ்வாறான தீர்வை எதிர்பார்கின்றனர்கள் என்பதற்கிணங்க அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் நலன்கருதியும் எதிர்வரும் ஓகட்ஸ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை வழங்கி சகல வர்த்தகர்களும் தமது ஊழியர்களும் தமது குடும்பத்தினருடன் இணைந்து விடுமுறையினை கழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இன்று இடம்பெற்ற முதலாவது நிர்வாக சபைக்கூட்டத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், தனியார் போக்குவரத்துச்சங்கம், சிகை உரிமையாளர்கள் சங்கம், உள்ளுர் விளை பொருள் உற்பத்தியாளர்கள் சங்கம், மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுவதாகவும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.