வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகள் இருளில்!!

776

வவுனியா நகரின் பல பகுதிகள் இரவு வேளைகளில் இருளில் மூழ்குவதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகருக்குள்ளான பிரதான வீதிகள் இரவு வேளைகளில் இருளில் மூழுகுவதால் நகருக்குள் வரும் பிரயாணிகள் உட்பட பொதுமக்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் அதிக வருமானமீட்டும் நகரசபையின் செயற்பாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பட்டானீச்சூர் தொடக்கம் வேப்பங்குளம் பகுதி வரையில் இரவில் இருள் சூழ்ந்த பிரதேசமாகவே உள்ளது.

வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் அவை எரியாத நிலையிலேயே காணப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் வவுனியா நகரசபை உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாகவே திருட்டுச் சம்பவங்கள் வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.