வவுனியாவில் நகரபையின் அனுமதிபெறாமல் அமைக்கப்பட்ட கட்டிடப்பணிகள் இடை நிறுத்தம்!!

652

வவுனியாவில் இன்று (27.07) பிற்பகல் வேளையில் நகரசபையின் அனுமதி பெறப்படாமல் தனியார் நிறுவனம் ஒன்றால் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட கட்டிடப்பணிகள் நகரசபை உறுப்பினர் சு.கண்டீபனின் தலையீட்டால் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவருகையில்,

வவுனியா வைரவப்புளியங்குளம் வட்டாரப் பகுதியில் வவனியா தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் தனியார் நிறுவனம் ஒன்றின் களஞ்சியசாலைக்கான பணிகள் அவசர அவசரமாக இடம்பெற்று வந்துள்ளது. இதையடுத்து பொதுமக்களினால் வவுனியா நகரசபை உறுப்பினர் சு.கண்டீபனுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நகரசபை உறுப்பினர்களான உப தவிசாளர் சுந்தரம் குமாரசாமி, நா.சேனாதிராசா, திருமதி.லக்சனா நாகராஜன், ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

இதையடுத்து நகரசபை தவிசாளருக்கு உறுப்பினர்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் பதிலுக்கு ஒருவரை அனுப்புவதாக தவிசாளர் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் உப தவிசாளர் குறித்த தனியார் நிறுவனத்தின் கட்டிடப்பணியாளருடன் சென்று நகரசபையின் அனுமதியை காண்பிக்குமாறு கோரியபோது அனுமதி பெற்றிருக்கவில்லை. இதையடுத்து ஆரம்பிக்கப்பட்ட கட்டிடப்பணிகளை இடை நிறுத்துமாறும் எதிர்வரும் திங்கட்கிழமை நகரசபையின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு சட்ட ரீதியில் கட்டிடப்பணிகளை ஆரம்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அங்கு சென்ற பொலிசார் நகரசபையின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி கட்டிடப்பணிகளை ஆரம்பிக்குமாறு தனியார் கட்டிடப்பணியாளருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கட்டிடப்பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.