வவுனியா – நகர பள்ளிவாசலுக்கு அருகேயுள்ள நடைபாதையில் வியாபாரம் செய்பவர்களை அகற்றினால் அல்லது அப்பகுதியில் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டால் இலுப்பையடி நடைபாதையில் தாம் வியாபாரம் மேற்கொள்வதை கைவிடுவதாக அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொடர்ந்தும் அவர்கள் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நகரசபை ஊழியர்கள் வந்து நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதை தடை செய்ததுடன், எமது பொருட்களையும் கையகப்படுத்தியிருந்தனர்.
அத்துடன், வியாபாரம் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் அவகாசம் தந்துள்ளார்கள். எமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்துமாறும் அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் நகர பள்ளிவாசலுக்கு முன்பாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அவர்களுக்கு எவ்விதமான தடைகளும் விதிக்கப்படவில்லை. அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு நகரசபையினர் பள்ளிவாசலுக்கு முன்பாக வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு சட்டமும், இலுப்பையடியில் வியாபாரம் மேற்கொள்ளும் எமக்கு ஒரு சட்டத்ததையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
எதிர்காலத்தில் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களை அகற்றும் பட்சத்தில் அல்லது அவ்விடத்தில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதற்கு தடை செய்யும் பட்சத்தில் நாங்களும் இலுப்பையடியில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதை நிறுத்திக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.










