வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் நேற்று (31.07.2018) மாலை 6.30 மணியளவில் இ.போ.ச பேரூந்தினை வெளிச்செல்லவிடாது தனியார் பேரூந்துகள் தரித்து நின்றமையினால் சற்று பரப்பான நிலை காணப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் வெளி இடங்களிலிருந்து வேறு மாவட்டத்திற்கு செல்லும் பேரூந்துகள் உட்பிரவேசிப்பதற்கு தடை பிறப்பிக்கப்பட்டு புதிய பேரூந்து நிலையத்தினுள் இ.போ.ச, தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டன.
இந் நிலையில் வெளி இடத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கு செல்லும் இ.போ.ச பேரூந்து புதிய பேரூந்து நிலையத்தினுள் சென்று தரித்து நின்று பயணிகளை ஏற்றியமையினால் தனியார் பேரூந்து ஊழியர்கள் புதிய பேரூந்து நிலையத்தின் பேரூந்துகள் வெளிச்செல்லும் பாதையில் பேரூந்துகளை தரித்து இ.போ.ச பேரூந்துகள் வெளிச்செல்ல விடாது முற்றுகையிட்டனர்.
இதனால் புதிய பேரூந்து நிலையத்தில் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார் போக்குவரத்துக்கு இடையூராக தரித்து நின்ற தனியார் பேருந்து சாரதிகளுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியமை என்ற குற்றச்சாட்டில் அவர்களுக்கு தண்டப்பத்திரம் வழங்கப்பட்டதுடன் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு பணித்தனர்.
இதன் பின்னர் தற்போது புதிய பேரூந்து நிலையத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.











