கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். கமலின் மூத்த மகள் ஸ்ருதி பெற்றோர் வழியில் நடிக்க வந்துவிட்டார்.
அவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இதற்காக அவர் மும்பையில் வீடு எடுத்து தங்கி உள்ளார். அவரது தங்கை அக்ஷராவும் மும்பையில் தனது தாயுடன் தங்கி உள்ளார்.
அக்ஷரா ஹாஸனுக்கு படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவரோ நான் நடிக்க வர மாட்டேன் கேமராவுக்கு பின்னால் இருக்கவே விரும்புகிறேன் என்று திட்டவட்டமாக கூறினார்.
இத்தனை காலமாக நடிக்க மறுத்து வந்த அக்ஷரா இந்தி இயக்குனர் ஆர். பால்கியின் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். படத்தில் அமிதாப் பச்சனும் இருக்கிறார்.
தனுஷ் ராஞ்ஹனா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே ஹிட்டானதுடன் அவருக்கு பெயரும், புகழும் கிடைத்தது. இந்நிலையில் அவர் மீண்டும் இந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார்.
தனுஷ் ஸ்ருதி ஹாஸனுடன் 3 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் ஸ்ருதியின் தங்கை அக்ஷராவுடன் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





