வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபார நிலையங்களை திறப்பது உரிமையாளர்களின் முடிவே : வர்த்தகர் நலன்புரிச்சங்கம் அறிவிப்பு!!

865

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபார நிலையங்கள் திறப்பது உரிமையாளர்களின் முடிவே என வர்த்தகர் நலன்புரிச்சங்கம் அறிவித்துள்ளது.

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கி ஊழியர்கள் தமது குடும்பத்தினருடன் இன்புற்றிருக்க வியாபார நிலைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு வர்த்தகர் சங்கத்தினால் வியாபார நிலையங்களுக்கு அண்மையில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தினால் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்படவேண்டும் என்று அரசாங்கத்தினாலோ தொழில் திணைக்களத்தினாலோ சட்டம் இல்லை எனவும், வியாபார நிலையங்களைத் திறப்பதும் பூட்டுவதும் வியாபார நிலைய உரிமையாளர்களின் உரிமை, அதில் எவ்வித தலையீடுகளும் செய்ய மாட்டோம் என்று தொழில் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளதாக துண்டுப்பிரசுரங்கள் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அத் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் மூடுவது தொடர்பாக தொழில் திணைக்கள ஆணையாளரை 13ம் திகதி சந்தித்து கலந்துரையடினோம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு அரசாங்கத்தினாலோ அல்லது தொழில் திணைக்களத்தினாலோ சட்டம் எதுவும் இல்லை. வியாபார நிலையங்களைத் திறப்பதும் மூடுவதும் வியாபார நிலைய உரிமையாளர்களின் உரிமை. அதில் எவ்வித தலையீடுகளையும் செய்யமாட்டோம் என்று தொழில் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தொழில் புரியும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளையும் விடுமுறைகளையும் தொழில் திணைக்கள சட்டத்திற்கேற்ப நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்பது தொழில் திணைக்களத்தின் ஆணையாளரின் வேண்டுகோள்.

ஆகையால் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்கள் வசதிகளுக்கேற்பவும் ஊழியர்கள் பாதிக்கப்படாதவகையிலும் வாடிக்கையாளரின் தேவைகள் கருதியும் முடிவு எடுக்கலாம் என்று அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.