வவுனியாவில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!!

770

வவுனியாவில் உணவகம் ஒன்றில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

வவுனியா உதவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.குமாரசிங்க தலைமையின் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்குக்கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து நாலேமுக்கால் போத்தலுடன் சாராயமும், 48 பியர் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

போயா தினமான நேற்று சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் தொடர்பாக புலனாய்வுப்பரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது வவுனியா மகாறம்பைகுளம் ஸ்ரீராமபுரம் பகுதியிலுள்ள கடை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அக்கடையில் மறைத்து வைத்து வியாபாரம் மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 43 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட மதுபானப்போத்தல்களையும் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நடவடிக்கையின்போது பொலிஸ் சார்ஜன் பாலித்த (64358), பொலிஸ் கொஸ்தாபிள்களான ராஜபக்ச (45720), விக்ரமசூர்ய(36099), ஏக்கநாயக்க (85257) ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.