வவுனியா வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் என பலர் விஜயம்!!

419

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான (300 மீற்றர் உயரமுடையை) வெடுக்ககுநாரி மலை அமைந்துள்ளது

குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய இலிங்கம் காணப்படுவதுடன் தமிழ் மக்களுடைய நாகர்களின் புராதான பிராமிய எழுத்துக்களும் காணப்படுகின்றன . கடந்த ஐந்து தலைமுறையாக அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் கடந்தவாரமளவில் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இத்தடையினை தற்காலிகமாக தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேனி பொலிஸார் நீக்கி வழிபாடுகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதியளித்துள்ளதுடன் ஆலயத்தினை புனரமைப்பு செய்வதற்கும் புதிய கட்டிட நிர்மாணப்பணிகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் ஆலயத்தினை முழுமையாக மீ்ட்டுத்தருமாறு கோரி வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினர் , கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந் நிலையிலேயே நேற்று (26.08.2018) மாலை 4 மணியளவில் நெடுங்கேனி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிலைமைகளை தேசிய சக வாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகனேசன் , பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா , வடமாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

இதன் போது வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வவுனியா வடக்கு கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லினக்க மன்றத்தினரும் ஆலய நிர்வாக சபையினரும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகனேசனிடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.