கிளிநொச்சியில் உயிரிழந்த பெண் தொடர்பில் வெளிவந்த மேலும் சில தகவல்கள்!!

292

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடனடியாக செயற்பட்டு குறித்த யுவதி யார் என தெரிந்துகொள்வதற்கு கடும் முயற்சி செய்திருந்தனர்.

இந்த நிலையில், கிடைக்கப்பெற்ற தடயப்பொருட்களை அடிப்படையாக வைத்து மிகவும் சாதுரியமாக செயற்பட்ட ஊடகவியலாளரும், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் உயிரிழந்த பெண் யார் என்பதை கண்டுபிடித்திருந்தனர்.

அந்த வகையில் “முல்லைத்தீவு – முறுகண்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 32 வயதுடைய கறுப்பையா நித்தியகலா” என்பவரே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

எனினும் குறித்த பெண் தொடர்பில் தற்போது மேலும் சில தகவல்கள் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கணவரால் கைவிடப்பட்டவர் என தெரியவந்துள்ளது. மேலும், இவருடைய பிள்ளை தொடர்பாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது இவருடைய பிள்ளை மாற்றுத்திறனாளியான 5 வயதுடைய பெண் பிள்ளை என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இவர் 28ஆம் திகதி மாலை 7.15 மணியளவில் ஆடைத்தொழிற்சாலையில் தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார் என அறியமுடிகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதோடு, சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த பெண்ணின் சடலத்தை சிறிய குட்டை ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவரே முதலில் கண்டு கிளிநொச்சி பொலிஸாருக்கும், கிராம அலுவலருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.