யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினை சீர்செய்த இளைஞனுக்கு போக்குவரத்து அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜேர்மன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் ஜனித் திமந்த விதானாராச்சி என்ற மாணவன் ரயிலின் கோளாறை சீர் செய்திருந்தார்.
கடந்த வாரம் இடம்பெற்ற இந்த செயற்பாடு காரணமாக குறித்த இளைஞன் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தார்.
இது தொடர்பில் தகவல் அறிந்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, குறித்த இளைஞனை அமைச்சுக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரயில் திணைக்களத்தினால் குறித்த இளைஞன் பாராட்டப்பட்டதுடன், போக்குவரத்து அமைச்சினால் அவருக்கு பாராட்டு கடிதம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விபரித்த இளைஞன், நான் குடும்ப உறவினர்கள் சிலருடன் அனுராதபுரத்தில் இருந்து ரயிலில் வந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றது. அந்த சந்தர்ப்பத்தில் நான் ரயிலில் உறங்கி கொண்டிருந்தேன். எனது அம்மா இந்த ரயிலின் கோளாறினை தீர்க்க முடியுமா என என்னிடம் கேட்டார். அதற்கமைய அதிகாரிகளின் அனுமதியுடன் என்ன கோளாறு என பார்த்து அதனை சீர்செய்தேன்.
இந்த சம்பவத்தை யாரோ ஒருவர் பேஸ்புக் மூலம் வெளியிட்டதனை தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாகியது. அதற்கு போக்குவரத்து அமைச்சர் என்னை பாராட்டியிருந்தார். மகிழ்ச்சியாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






