சச்சின் என்னை மறந்து விட்டார் : வினோத் காம்ப்ளி வருத்தம்!!

272

sachin-kambliபிரிவு உபசார விருந்து நிகழ்ச்சிக்கு டெண்டுல்கர் தன்னை அழைக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது என முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்று விட்டார். இதன்பின் தனது நெருங்கிய நட்பு வட்டத்தினருக்கு பிரிவு உபசார விருந்து கொடுத்து அசத்தினார். இந்த விருந்து நிகழ்ச்சிக்கு வினோத் காம்ப்ளிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதுகுறித்து காம்ப்ளி அளித்த பேட்டியில் கடந்த 2009ம் ஆண்டு டெலிவிஷன் ரியாலிட்டி ஷோவில் நான் அணிக்கு திரும்ப சச்சின் போதுமான அளவுக்கு உதவி செய்யவில்லை. எங்கள் இருவருக்கும் இடையிலான உறவு துண்டாகி விட்டது அதன் பிறகு இருவரும் பேசியது இல்லை.

சச்சினின் குரலை நான் கேட்டு நீண்ட நாட்கள் ஆகிறது. இது எனக்கு வேதனையை அளிக்கிறது. கடந்த 7 வருடங்களாக நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததில்லை.

சில எஸ்.எம்.எஸ். தகவலை மட்டும் பரிமாறி இருக்கிறோம். என்னவோ நாங்கள் இப்போது எதிரிகளாக ஆகி விட்டது போல் இருக்கிறது இது வேதனை அளிக்கிறது. வான்கடே மைதானத்தில் கடைசி ஆட்டத்தை முடித்த பின்னர் எனது நண்பர் சச்சினின் கண்களில் கண்ணீர் வடிவதை பார்த்த போது எனது கண்களில் கண்ணீர் முட்டியது.

பிரிவு உபசார உரையில் சச்சின் எனது பெயரை குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன். அவர் பேசாதது எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. தன்னுடன் விளையாடிய வீரர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அளித்த விருந்து நிகழ்ச்சிக்கு என்னையும் அழைப்பார் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் எனக்கு அதற்கு அழைப்பு வரவில்லை இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நான் மட்டுமின்றி எனது குடும்பத்தினரும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தனர்.
10 வயதில் இருந்தே இருவரும் எங்களுடைய எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டு இருக்கிறோம்.

ஆட்டத்தில் இருவரும் சேர்ந்து வளருகையில் ஒருவரிடம் இருந்து ஒருவர் ஆட்ட நுணுக்கத்தை கற்றோம். நான் எப்பொழுதும் சச்சினை நண்பராகவே நினைக்கிறேன். அவரை பற்றி நான் எதுவும் தவறாக பேசியதில்லை. மீண்டும் நாங்கள் நண்பனாக முடியும் என்று நினைக்கிறேன்.

சச்சினிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தால் கூட நாங்கள் மீண்டும் நட்பாகி விடுவோம் என்று தெரிவித்துள்ளார். மும்பையை சேர்ந்த 41 வயதான வினோத் காம்ப்ளி 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.