12வது குழந்தை : அடம்பிடிக்கும் நிறைமாத கர்ப்பிணி!!

372

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 48 வயது பெண் ஒருவர் தமது 12 வது குழந்தையை வீட்டிலேயே சுகப்பிரசவம் மூலம்தான் பெற்றெடுப்பேன் என்று போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி கீழத்தெருவில் வசிக்கும் கண்ணன் சந்தி தம்பதிக்கு 5 மகள்கள் உள்ளிட்ட 8 பிள்ளைகள் உள்ளன. இதுமட்டுமின்றி, சாந்தியின் 2 குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டனர்.

இந்நிலையில், சாந்தி தற்போது 12வது முறையாக கர்பமாகியுள்ளார். அவரை வீட்டில் சென்று பரிசோதனை செய்துவரும் கிராம சுகாதார செவிலியர் சுப்புலட்சுமி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சாந்தியை பலமுறை அழைத்துள்ளார்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்ல மறுத்த சாந்தி தன்னை அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்து குடும்பக்கட்டுப்பாடு செய்துவிடுவீர்கள்.

அதனால் நான் மருத்துவமனைக்கெல்லாம் வரமாட்டேன் என்று கூறிவந்ததோடு தான் வீட்டிலேயே 11 குழந்தைகளை பெற்றுள்ளேன், அதேபோல் இந்தமுறையும் வீட்டில்தான் குழந்தை பெற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சாந்தியின் வீட்டிற்கு சென்ற கிராம சுகாதார செவிலியர் அவரை அழைத்துக்கொண்டு முசிறி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது சாந்திக்கு ரத்தம் குறைவாக உள்ளதை உறுதிசெய்துள்ளனர். அதன் பின்னர் ரத்தம் ஏற்றுவதற்காக முழு ஏற்பாடுகளையும் செய்த மருத்துவக்குழுவினர் சாந்தி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மருத்துவ குழுவினர் வருவதை அறிந்த சாந்தி அங்கிருந்து முசிறி காவிரி ஆற்று அக்ரஹார படித்துறை பகுதியில் தலைமறைவாகியுள்ளார்.

அங்கு சென்று மருத்துவக்குழுவினர் பார்த்தபோது காவிரி ஆற்றில் தண்ணீருக்குள் ஒளிந்துகொண்டார்.

பின்னர் அவரை மீட்டு கரைக்கு அழைத்து வந்த மருத்துவக்குழுவினர் நீண்ட நேரமாக போராடியும் சாந்தி மருத்துவமனைக்கு வர மறுத்துவந்தார்.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் அளித்த கிராம சுகாதார செவிலியர், பொலிசாரின் அறிவுரைப்படி சாந்தியை முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.