வவுனியா வைத்தியசாலையில் பராமரிப்பு இன்மையால் நிர்வாக கட்டிடத்திற்குள் கழிவு நீர் கசிவு : ஊழியர்கள் வெளியேற்றம்!!

393

வவுனியா பொது வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்குள் கழிவு நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நிர்வாக கட்டிடத்திற்கு மேலே சத்திரசிகிச்சை கூடம் அமைந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நிர்வாக கட்டிடத்திற்குள் கசிந்துள்ளதால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அச்சம் காரணமாக வேளியேறியுள்ளனர்.

குறித்த நிர்வாக கட்டிடத்திற்கு மேல் வெடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அது சம்பந்தமாக வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எழுத்துமூலமாக சுட்டிக்காட்டியுள்ள போதும் நிர்வாகம் நடவடிக்கை எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொது வைத்தியாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்..

வவுனியா பொது வைத்தியசாலையின் நிர்வாக கட்டிடத்திற்கு மேலுள்ள கட்டிடத்தில் சத்திரசிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் அமைந்துள்ளது. அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரில் நோய்களை பரப்பக்கூடிய அபாயகரமான கிருமிகள் இருக்கும் என்பதால் நிர்வாக கட்டிடத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த மாதம் முடிவடையும் நிலையில் வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளப் பணம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளுக்கான கணக்குகள் பார்க்கப்பட்டு அவை வழங்கப்பட வேண்டிய நிலையில் நிர்வாக கட்டிடத்திலிருந்து ஊழியர்கள் வெளியேறியமை சம்பளம் வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.