எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்படாது எனவும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடிய பின்னர் அன்றைய தினமே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பிரதமர் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் 14ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்க உரை மாத்திரமே நாடாளுமன்றத்தில் நடக்கும்.
நாடாளுமன்றம் கூடிய பின்னர் நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும்.
எதிர்வரும் 14ஆம் திகதியின் பின்னர் இரண்டு வாரங்களில் இந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வெளிநாடு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்பி வருவதாகவும் லசந்த அழகியவண்ண மற்றும் வீரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் எனவும் அபேவர்தன கூறியுள்ளார்.






