பெற்றோரை வழியனுப்ப சென்ற மகன்… நொடியில் பறிபோன உயிர் : கதறும் குடும்பம்!!

555

 

நொடியில் பறிபோன உயிர்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்பொது இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பெற்றொர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம் விஜயன். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டுவரும் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவரது பெற்றோர் சொந்த ஊரான பாலக்காட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்குமுன்னர் மகனைக் காண பெங்களூரு சென்றுள்ளனர். சில நாள்கள் மகனுடன் தங்கியிருந்த நிலையில், இருவரும் ஊருக்கு புறப்பட ரயிலில் முன்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து பெற்றோரை வழியனுப்ப விக்ரம் விஜயனும் ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். கடந்த திங்கள்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் மூவரும் ரயில் நிலையம் வந்துள்ளனர்.

விக்ரமும் பெற்றோருடன் ஏ.சி கோச்சில் ஏறி, அவர்களின் இருக்கையில் லக்கேஜ்களை வைத்துவிட்டு, திரும்பும்போது ரயில் புறப்பட்டிருந்தது. பெற்றோரைப் பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டு ஓடும் ரயில் இருந்து அவசரமாக இறங்கியுள்ளார் விக்ரம்.

அவர் ரயில் செல்லும் திசையின் எதிர்த்திசையில் இறங்கியதால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்தவர் நடைபாதைக்கும் ரயிலுக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளியில் சிக்கி பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனிடையே தனது மகன் கீழே விழுந்ததைப் பார்த்துப் பதறிய தந்தையும் ஓடும் ரயில் இருந்து குதித்தார். கீழே விழுந்த அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை ரயிலில் இருந்து பார்த்தவர்கள் உடனடியாக அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

விகரமின் தந்தை விஜயன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். பெற்றோரின் கண்முன்னே நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.