தொடரும் கடும் மழையால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 2,500 பேர் பாதிப்பு!!

325

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 688 குடும்பங்களை சேர்ந்த 2,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்கள் மற்றும் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான நிவாரணப்பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழர் தாயகமான வடக்கின் பல பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பெய்த கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை பெய்த அடைமழை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிகப் பெரிய குளமான – முத்தையன்கட்டு குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் வான்கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளன.

இதனால் குளத்தை அண்டியுள்ள தாழ்நில பிரதேசங்கள் அனைத்திலும் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ள நிலையில், மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகள் மற்றும் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட மன்னாகண்டல் வசந்தபுரம் கிராமம் நீரில் மூழ்கியுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் முப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களை மன்னாககண்டல் பாடசாலையில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலக அதிகாரிகள் கிராம அலுவலர் உள்ளிட்டவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தேராங்கண்டல் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட ரெட்பானா, மாணிக்கபுரம், வள்ளிபுனம், மந்துவில், ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கனகரத்தினபுரம், பண்டாரவன்னி, பனிக்கன்குளம், உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் 599 குடும்பங்களை சேர்ந்த 1908 பேர் 16 இடைத்தங்கல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாந்தை கிழக்கு அம்பாள்புரம் கொல்லவிழாங்குளம் பகுதியிலும் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதோடு வவுனிக்குளத்தில் திடீரென நீர் வரத்து அதிகரித்ததால் நன்னீர் மீன்பிடி உபகரணங்களும் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலைப்பாணி கிராமத்துக்கான போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளது. முல்லைத்தீவின் பிரதான வீதிகளில் குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் பலபகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு வீதியின் மன்னாகண்டல் பகுதி மற்றும் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியின் மூங்கிலாறு தீவிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீதியை குறுக்கறுத்து நீர் பாய்ந்து வருகின்றது.

தற்போது செய்கை செய்யப்பட்ட நெற்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கால்நடைகள் பல வெள்ள நீரில் சிக்கி காணாமல் போயுள்ளதுடன், வீடுகள் வியாபார நிலையங்களுக்குள் வெள்ளம் சென்றமையால் பாரிய சொத்திழப்புக்களும் ஏற்ப்பட்டுள்ளன.

அனர்த்தத்தில் சிக்குண்டவர்களை மீட்க முப்படையினருடன் பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் களத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதோடு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களில் அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.