இறந்த தாயின் சடலத்துடன் 18 நாட்கள் வாழ்ந்த இளைஞன் : வெளியான மர்ம தகவல்கள்!!

313

கொல்கத்தாவில் இளைஞன் ஒருவர் இறந்துபோன தனது தாயின்உடலை அடக்கம் செய்யாமல் 18 நாட்கள் சடலத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.

38 வயதான மைத்ரேய பட்டாசார்யா எம்.சி.ஏ வரை படித்துள்ளார். இவரின் தந்தை கோரசந்த் பட்டாசார்யா நரம்பியல் நிபுணராக இருந்தவர்.

இவர் கடந்த 2013-ம் ஆண்டு இறந்துவிட்டார். தாய் கிருஷ்ணா பட்டாசார்யா அதே பகுதியில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தந்தை இறந்த பிறகு, தாயும் மகனும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

18 நாள்களுக்கு முன்பு தாய் கிருஷ்ணா உயிரிழந்துள்ளார். தாய் இறந்ததும் வீட்டில் உள்ள அனைத்து கதவுகள், ஜன்னல்களை மூடிவிட்டு இறந்த தாயுடன் இருந்துள்ளார் மைத்ரேய பட்டாசார்யா.

இந்நிலையில் தான் தனது தாயின் உடலை புதைக்க உதவி கேட்டபோதுதான் அவரது நண்பர் பொலிசிற்கு தகவல் தெரிவத்ததையடுத்து, பொலிசார் வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது துர்நாற்றம் வீசியது. அதன்பின்னர் இறந்துபோன தாயின் சடலத்தை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசியுள்ள மைத்ரேய பட்டாசார்யா, “நானும் என் அம்மாவும் மட்டுமே இந்த வீட்டில் வசித்து வருகிறோம்.

வயது முதிர்வால் என் அம்மாவால் தரையில் படுத்துத் தூங்க முடியவில்லை. கட்டில் வாங்கும் அளவுக்கு எங்களுக்கு வசதியில்லை. அதனால் எங்கள் வீட்டில் இருந்த மர அலமாரியைக் கட்டில்போல் செய்து கொடுத்தேன். அதில்தான் என் அம்மா தினமும் படுத்து ஓய்வெடுப்பார்.

ஒரு நாள் காலை வீடு அழுக்காக இருந்ததால் அம்மா அதை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் வழுக்கி கீழே விழுந்துவிட்டார்.

அதனால் அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவச் செலவுக்கு என்னிடம் பணம் இல்லை. வங்கியில் பணம் கேட்டிருந்தேன். அது கைக்கு வரச் சற்று காலதாமதம் ஆகும் எனக் கூறினார்கள். அடுத்த சில நாள்களில் கால் வலி தாங்காமல் என் அம்மா இறந்துவிட்டார்.

கட்டிலில் படுத்திருக்கும்போதே அவர் உயிர் பிரிந்துவிட்டது. அவர் இறந்தது எனக்கு நன்றாகத் தெரியும். உடனடியாக என் வீட்டில் உள்ள கதவுகளை மூடி அவர் உடலைப் பாதுகாத்துவந்தேன்.

ஒருவர் இறந்து 21 நாள்கள் கழித்து அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என என் அப்பா கூறுவார். அம்மாவுக்கும் அதில் அதிக நம்பிக்கையுண்டு. அந்த மங்களகரமான நேரத்துக்காகத்தான் காத்திருந்தேன். முதலில் இறந்த உடலுடன் இருப்பது சற்று கடினமாகத்தான் இருந்தது. பிறகு, எதுவும் தெரியவில்லை என கூறியுள்ளார்.

இவர்களது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் கூறியதாவது, இவர்களது குடும்பத்தினர் யாரும் பேசமாட்டார்கள், வெளியிலும் வரமாட்டார்கள். முன்னதாக அவர் தந்தை இறந்தபோதும் பல மர்மங்கள் நிலவியது என கூறியுள்ளனர். பல மர்மங்கள் நிறைந்த இந்த வழக்கு குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.