வவுனியாவில் “இணையும் கரங்கள்” ஏற்பாட்டில்நயினாமடு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி!!

386

வவுனியா நெடுங்கேணி நயினாமடு “இணையும் கரங்கள்” ஏற்பாடு செய்திருந்த “மாற்று வலுவுள்ளோர் தினம்” நேற்று நயினாமடு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்வுகளும், பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன .

இதன்போது புங்குடுதீவைச் சேர்ந்தவரும் லண்டனில் வசித்து, அமரத்துவம் அடைந்தவருமான மு.சொக்கலிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவாக அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அவரது குடும்பத்தினரால் மாற்றுவலுவுள்ளோருக்கு ரூபா 50,000 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவருமான சந்திரகுலசிங்கம்(மோகன்) , வட மாகாணசபை உறுப்பினர்கள் தியாகராசா, இந்திரராசா, ஜி.ரி. லிங்கநாதன்(விசு) சமூக சேவையாளர் செல்வராசா சந்திரகுமார் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், ஊர்ப் பிரமுகர்கள், பிரதேசசெயலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இணையும் கரங்கள் நிறுவனம் மாற்றுத் திறனாளிகளை கொண்டு இயங்கும் அமைப்பாகும். இவர்களில் பெரும்பாலானவோர் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் நிறுவன செயட்பாட்டுக்கென தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் 25,000 ரூபாவினை வழங்கி வைத்தார்.

புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவருமான சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் தனதுரையில் ‘மாற்று வலுவுள்ளோருக்கு அரசாங்கம் உதவி செய்வதை விட, புலம்பெயர் எமது உறவுகள் தான் மிகவும் கூடுதலான உதவிகளை செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனதுரையில் அரசாங்கம் எம் மக்களை மாற்றந்தாய் மனப்பாங்குடன் நடத்துவதாகவும், போர்ச் சூழல் காரணமாக அங்கங்களை இழந்து அவலப்படும் எம் மக்களுக்கு தேவையான உதவிகளாக இதுவரை புலம்பெயர் உறவுகள் சுமார் 18 லட்சம் ரூபாவினை என்னுடாக அனுப்பி, மாற்று திறனாளிகளுக்கு உதவி உள்ளதாகவும், மேலும் அவர்களிடம் உதவிகளை பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்க்கையில் நம்பிக்கைவர உதவ வேண்டும் என்றும், புலம்பெயர் உறவுகள் அதற்கு என்றும் பக்கபலமாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.12 3 4 5 6 7 8 9 10