ஆனையிறவில் மற்றொரு போர் நினைவுச் சின்னம்!!

1642

AANAIஆனையிறவில் மற்றொரு போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனையிறவில் படையினர் ஏற்கனவே ஒரு போர் வெற்றிச் சின்னத்தை அமைத்துள்ளனர்.

இந்தநிலையில் ஆனையிறவுப் பகுதியில் ஹசலக்க காமினி என்று அழைக்கப்படும் கோப்ரல் காமினி குலரத்ன என்ற படைச் சிப்பாயின் உருவச்சிலை அமைக்கப்பட்டு வருகிறது.

1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் ஆனையிறவுப் பெருந்தளம் மீது, முற்றுகைத் தாக்குதல் நடத்திய போது புல்டோசர் கவசஊர்தி மூலம் முன்னரங்க நிலைகளை அழிக்க மேற்கொண்ட முயற்சி கோப்ரல் காமினி குலரத்னவால் முறியடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த கோப்ரல் காமினிக்கு சிறிலங்காவின் அதிஉயர் விருதான பரம வீர விபூஷண விருது வழங்கப்பட்டது.

ஆனையிறவுப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் கைப்பற்றிய பின்னரும் குறிப்பிட்ட புல்டோசர் கவசஊர்தி அந்த இடத்தில் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டிருந்தது.

சிறிலங்காப் படையினர் வசம் ஆனையிறவு வீழ்ச்சி கண்ட பின்னர், குறிப்பிட்ட இடமும் ஒரு போர்ச்சுற்றுலா மையமாக மாற்றமடைந்தது. அங்கு தற்போது கோப்ரல் காமினியின் உருவச் சிலை அமைக்கப்பட்டு வருவதாகவும், அதனை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அல்லது பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச திறந்து வைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோப்ரல் காமினியின் சொந்த இடமான ஹசலக்கவில், அமைக்கப்பட்ட அவரது உருவச்சிலையை கடந்த ஓகஸ்ட் மாதம் சிறிலங்கா அதிபர் திறந்து வைத்திருந்தார்.