யாழ் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
காதலில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாகவும் வக்கிர தன்மையுடைய ஆண் வர்க்கத்தினரால் காதல் வலையில் விழும் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் சம்பவங்களும் யாழ்ப்பாணத்தின் கிராமப் புறங்களில் மேலோங்கி காணப்படுகிறது.
கணவனை இழந்த பெண்கள், வன்செயலில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கணவன்மார் தடுப்பு முகாமிலுள்ளவர்களின் மனைவிமார்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட
சம்பவங்களும் காணப்படுகின்றனவென குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரச்சினைக்களுக்கு சட்டத்தின் உதவியுடன் தீர்வைப் பெற்றுக் கொடுக்க தாங்கள் முயன்று வருவதாக யாழ். பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பெற்றோர்களின் விழிப்புணர்வு இல்லாத நிலைமையே இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுவதற்கான காரணமென யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின் படுகொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்படுதல், சிறுமிகள் வல்லுறவுக்குட்படுத்தல் தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரையில் அண்மைக்காலமாக கலாசார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. சிறுமிகளை ஒரு சில முதியவர்கள் வல்லுறவுக்குட்படுத்துகின்ற சம்பவங்களையும் இளம் பெண்கள் காதல் என்ற வலையில் வீழ்ந்து வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்களையும் பத்திரிகைகளின் வாயிலாக அறியமுடிகிறது.
மேலும் குடாநாட்டின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் வகையில் மர்மமான முறையில் இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் எமது கலாசாரத்தை பாதிக்கும் வகையிலேயே இடம்பெற்று வருகிறது.
எனவே பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் தமது பெண்பிள்ளைகள் குறித்து அக்கறையாக இருக்கவேண்டும். பெண்பிள்ளைகளை தனிமைப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். எந்தநேரமும் அவர்களை உங்களது கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறான கலாசார சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தும் முக்கிய பங்கு பத்திரிகைகளுக்கும் உண்டு. அவற்றின் ஊடாகவே எமது கலாசாரத்தை பாதுகாக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.




