மரத்தில் இருந்த சிறுவனை பறவை என நினைத்து துப்பாக்கியால் சுட்ட வேட்டைக்காரன் : துடிதுடித்து இறந்த பரிதாபம்!!

352

துடிதுடித்து இறந்த பரிதாபம்

மரத்தில் ஏறி அமர்ந்திருந்த 9 வயது சிறுவனை பறவை என நினைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வேட்டைக்காரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாய்லாந்தின் பான் ப்ரேக் தாக்ரோவைச் சேர்ந்த சாலர்மாய் ஜொப்ரதா என்கிற 9 வயது சிறுவன் கடந்த 10ம் திகதி முதல் மாயமாகியுள்ளான். அன்றுமுதல் சிறுவனின் உறவினர்கள் சுற்றியுள்ள பகுதிகளில் அவனை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

புதன்கிழமை காலை ஒரு பெரிய பாறையால் மூடப்பட்ட ஒரு ஆழமான பகுதியில் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் உள்ளூர் மனிதர் பிரமுக் கோசின் (38) என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் இருந்து வேட்டையாடும் துப்பாக்கி மற்றும் எட்டு தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நொங் பிலு கண்காணிப்பாளர் பொல் கேணல் சயாகோர்ன் ஸ்ரீலதேகோ கூறியுள்ளார்.

பின்னர் இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, சம்பவத்தன்று பறவையை வேட்டையாடுவதற்காக பிரமுக் காட்டுப்பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது திடீரென ஒரு மரத்தின் கிளை அசைவதை பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் அருகில் சென்ற போது, சிறுவன் இறந்து கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தான் தவறுதலாக சிறுவனை சுட்டுகொன்றுவிட்டதை மறைப்பதற்காக அவனுடைய உடலை, ஒரு ஆழமான பள்ளத்தில் புதைத்துவிட்டு பாறாங்கல்லால் மூடி மறைத்து வைத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார். அதேசமயம் உயிரிழந்த சிறுவன் சாலர்மாய், தன்னுடைய ஏழைக்குடும்பத்தை காப்பாற்றுவதற்காக குத்துசண்டை போட்டிகளில் பங்கேற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.