கட்டுப்பாடற்ற வேகம் : 157 பேரை பலிவாங்கிய விமானம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

316

வெளியான அதிர்ச்சித் தகவல்

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 157 பேரை பலிகொண்ட போயிங் 737 விமான விபத்தில், அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விமானமானது ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பிய சில நொடிகளில் கட்டுப்பாடற்ற வேகத்தில் குதித்ததாகவும்,

அப்போதே விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, விமானத்தின் திடீர் வேகத்தை உணர்ந்த விமானி, உடனடியாக உயரத்தை அதிகரிக்க கோரியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விமானியின் அறையில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்ட தகவலில், கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடிக்கு மேலே செல்லவும், விமான நிலையத்தில் இருந்து 6,400 அடிக்கு மேலே செல்ல உடனடியாக அனுமதி அளிக்குமாறு விமானி கோரியுள்ளார்.

ஆனால் புறப்பட்ட இடத்தில் இருந்து வலதுபக்கம் திரும்பிய விமானம் 10,800 அடிக்கு சென்றதும் ரடார் பார்வையில் இருந்து மாயமாகியுள்ளது. இது குறித்த விமானத்தின் விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தகவல் பரிமாறிய சில நொடிகளில் நேர்ந்துள்ளது.

விமான விபத்து தொடர்பில் உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதால், விமானியின் உரையாடல் குறித்த தகவல்களை வெளியிட்ட நபர் தொடர்பில் ரகசியம் காக்கப்படுவதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகளுடன் விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானமானது தொடர்புகொள்ள முயன்றும், கோளாறு காரணமாக விமானியின் குரல் தடைபட்டதாகவும், தகவல் தெரிவித்த விமானியின் குரல் மிகவும் பதற்றமாகவும், பயத்துடனும் காணப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.