வவுனியா, மன்னாரில் தொழில் முயற்சிகளுக்கு நெருக்கடி : சபையில் சிவசக்தி ஆனந்தன்!!

712

Sivasakthy Ananthanமன்னார் மாவட்ட கூட்டுறவுச் சபைக்குரிய கட்டடத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள படைத்தரப்பினரிடமிருந்து அந்தக் கட்டடத்தை விடுவித்து கூட்டுறவுச் சங்கத்தினரிடம் மீளக் கையளித்து சங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வழிவிடுவதற்கு கூட்டுறவு அமைச்சர் வழிஏற்படுத்த வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று12.12.2013 பாராளுமன்றத்தில் கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகம், கடற்றொழில் நீர்வள மூலங்கள் அபிவிருத்திக்கான வரவு-செலவுதிட்ட ஒதுக்கீடு தொடர்பாக இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..

மன்னார் மாவட்டத்தில் உள்ள மொத்தம் ஏழு பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கும் தலா பத்து மில்லியன் ரூபாவிற்குக் குறையாமல் நிதியொதிக்கீடு செய்து மாவட்டத்தில் நெற்கொள்வனவு செய்வதற்கு வழியேற்படுத்த வேண்டும். இந்த நிதி வழங்கப்படாவிட்டால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் மிகக்குறைந்த விலைக்கு தனியார் வர்த்தகர்களிடம் நெல்லை விற்க வேண்டிய சூழல் ஏற்படும். இது வங்கிக்கடன் பெற்றுள்ள விவசாயிகள் தமது கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாத நிலையைத் தோற்றுவிப்பதுடன் விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும்.

முசலி, அடம்பன் ஆகிய பிரதேசங்களில் பல்நோக்குக் கூட்டுறவு சங்கங்களின் வருவாயைப் பெருக்கும்பொருட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை சேமித்துவைப்பதற்கு இடமின்றித் தவிப்பதால் அவர்களது நெல்லைக் களஞ்சியப் படுத்துவதற்கு முசலி, மடு மற்றும் மாந்தை ஆகிய பகுதிகளில் நெற்களஞ்சியம் அமைத்துக் கொடுப்பதற்கு இந்த அரசு முன்வரவேண்டும்.

மன்னாரில் 32 மீனவர் சங்கங்கள் இருக்கின்றன. இவர்கள் தாங்கள் பிடிக்கின்ற மீன்களைக் கெடாமல் பாதுகாப்பதற்கு இன்றுவரை ஒரு ஐஸ் (பனிக்கட்டி) தொழிற்சாலைகூட நிறுவப்படவில்லை. இது தொடர்பாக பல்வேறுமுறை இந்தசபையில் தெரிவித்தும் இதுவரை இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இம்முறையாவது மன்னார் மாவட்டத்தில் ஒரு ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களது உயிரைப் பணயம் வைத்து மீன்பிடியில் ஈடுபடும் வன்னி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்கு இது மிகவும் அத்தியாவசியத் தேவையாகும்.

வவுனியா மாவட்டத்திற்கும் ஈச்சன்குளம், பம்பைமடு, கோமரசன்குளம், சாளம்பைக்குளம் ஆகியவற்றை உள்ளடக்கி ஆறு நெற்களஞ்சியங்கள் அமைக்கப்பட வேண்டும். போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் சமாளித்து தமது பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ளபோதிலும் அவர்களது விளைச்சலை இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பாகச் சேமித்துவைப்பதற்கான வழிதெரியாமல் துன்பப்படுகின்றனர். அவர்களின் உற்பத்தி வீணாகாமல் தடுப்பதற்கு இந்தக் களஞ்சியங்கள் மிகவும் அவசியமானதும் அவசரமானதுமாகும்.

ஓமந்தையில் நூதன அரிசிஆலை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள போதிலும் போதிய இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படாமையால் அந்த ஆலை செயற்படாமல் உள்ளது. சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவில் இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளாமையால் ஏராளமான மக்களின் வரிப்பணம் வீணாக முடங்கிப்போயுள்ளது. மேலும் இப்பிரதேச மக்கள் தமது நெல்லை காயவைத்து அரைப்பதற்கு நெடுந்தூரம் செல்லவேண்டியுள்ளது. அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஓமந்தை அரிசிஆலையை இயங்கச்செய்யுமா?

மரக்காரம்பளையில் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பால் பதனிடுதல் மற்றும் பால்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை இயங்கிவருகின்றது. இதற்கு சர்வதேச தொண்டுநிறுவனங்கள் நிதியுதவி செய்துள்ளன. இருந்தபோதிலும் போதிய நிதியின்மையால் இத்தொழிற்சாலை இப்பொழுது இயங்காமல் உள்ளது.

இத்தொழிற்சாலையை இயக்குவதற்கு 5 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிகின்றது. அரசாங்கம் அந்நிதியை வழங்கினால் வவுனியா மாவட்டத்தின் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருவாயைப் பெருக்கிக்கொள்ள முடியும் என்பதுடன் இத்தொழிற்சாலை இயங்காமையால் வவுனியா மாவட்ட கால்நடை வளர்ப்போர்கள் தமது பாலை மிகக்குறைந்த விலையில் தனியார் நிறுவனங்களுக்கு விற்கவேண்டிய நிலையில் உள்ளனர். அரசு இவர்கள்மீது கவனம் செலுத்த முன்வரவேண்டும் என்று கூறினார்.