கொழும்பு குண்டு வெடிப்பில் பலியான இளம் குடும்பஸ்தருக்கு பெருந்திரளானோர் கண்ணீர் அஞ்சலி!!

433

இளம் குடும்பஸ்தருக்கு  கண்ணீர் அஞ்சலி

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 359 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்ட சடலங்கள், இறுதிக் கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த கிருஸ்ணமூர்த்தி தயானந்தனின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.

33 வயதான கிருஸ்ணமூர்த்தி தயானந்தன் மஸ்கெலியா – லக்ஸபான, வாழமலை தோட்டத்தை சேர்ந்தவர். இவர் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் கடந்த 21ஆம் திகதி கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விசேட ஆராதனைகளில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின்போதே கிருஸ்ணமூர்த்தி தயானந்தன் பலியாகியுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நேற்று முன் தினம் இரவு மஸ்கெலியா – வாழமலை தோட்டத்திலுள்ள அன்னாரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் இடம்பெற்ற இறுதி கிரியைகளின் பின்னர் கிருஸ்ணமூர்த்தி தயானந்தனின் சடலம் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இறுதி கிரியைகளிலும், சடலம் நல்லடக்கம் செய்யப்பட்ட நிகழ்விலும் பெருந்திரளான மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.