இராவணன் பெளத்தமா? இந்துவா? யோகேஸ்வரன் எம்.பியும் மேர்வினும் வாய்த்தர்க்கம்!!

325

Mervinஇராவணன் இந்துவா? பெளத்தமா? இலங்கை இந்து நாடா? பெளத்த நாடா? என்பது தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம். பி.சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கும் இடையே சபையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

சிரேஷ்ட அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தின் போது யோகேஸ்வரன் எம்.பி இலங்கை ஒரு இந்து நாடு, புத்தர் ஒரு இந்து, என பல வரலாறுகளை மேற்கோள்காட்டி பேசினார்.

இதற்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்த மேர்வின் சில்வா, இலங்கை ஒரு பெளத்த நாடு, சிங்கள பெளத்த நாடு எனக் குறுக்கிட்டார். எனினும் யோகேஸ்வரன் எம். பி இலங்கை ஒரு இந்து நாடு என்பதே உறுதிபடத் தெரிவித்தார்.

எனினும் இதனை மறுத்த அமைச்சர் மேர்வின் சில்வா இலங்கை சிங்கள பெளத்த நாடு என்றே உறுதியாகத் தெரிவித்ததோடு இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு பெண்கள் கொண்டு வந்ததாக கூறிய மேர்வின் சில்வா, எனது மகன் ஈரானியப் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். அதற்காக அவர் ஈரானியர் ஆகிவிட முடியாது.

நானும் ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்தேன். அவரும் என்னை மிகவும் காதலித்தார். ஆனால் அவரின் பெற்றோர் விரும்பாததால் அது நிறைவேறவில்லை. முஸ்லிம் பெண்ணைக் காதலித்ததால் நான் முஸ்லிம் ஆகிவிட முடியுமா?

அதே போன்றுதான் மன்னர்களின் திருமண உறவுகளை வைத்துக் கொண்டு இந்த நாட்டை இந்து நாடாகக் கூற முடியாது என்றார். இவ்வாறு இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காது வாய்த்தர்க்கம் செய்துள்ளனர்.