மட்டக்களப்பு – காத்தான்குடி, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள மின்கம்பத்தில் மினிரக வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெயர் பலகையும், மின்கம்பமும் சேதமடைந்துள்ளது.
மினிரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த வாழைச்சேனையைச் சேர்ந்த 30 வயதுடைய நௌசாத், 29 வயதுடைய இர்ஷாத் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





