ஒரு பெண்ணிடம் யாழ். மற்றும் புத்தளம் முகவரிகளில் இரு அடையாள அட்டைகள்!!

683

புத்தளம் பிரதேச செயலாளர் செயலகத்திற்கு நேற்று மதியம் சென்றிருந்த பெண்ணொருவரிடம் இருந்து இரண்டு அடையாள அட்டைகளை, அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், புத்தளம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த பெண் தற்போது, புத்தளம் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசித்து வருபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் பிரதேச செயலாளர் செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் பெண்ணை சோதனையிட்ட போது, ஒரு அடையாள அட்டையைஅந்த பெண் வழங்கியுள்ளார்.

அவர் வைத்திருந்த கை பையை சோதனையிட்ட போது, மற்றுமொரு அடையாள அட்டையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பெண்ணிடம் இருந்த ஒரு அடையாள அட்டை யாழ்ப்பாண முகவரியில் எடுக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய அடையாள அட்டை புத்தளத்தில் உள்ள முகவரியில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டைகள் எந்த காரணத்திற்காக எடுக்கப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. சந்தேகநபரான பெண் தொடர்பாக புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

புத்தளம் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.